ஒவ்வொரு புது வருடம் ஆரம்பிக்கும் போதும், தவறாமல் அதனுடன் சேர்ந்து ஆரம்பிப்பவை 'இன்கம்டாக்ஸ் இம்சைகள்'. நம்மாட்கள் போலி அக்ரிமெண்ட்களையும், போலி மெடிக்கல் பில்களையும் இலஞ்சம் கொடுத்து, இந்நேரம் சேகரிக்கத் தொடங்கியிருப்பார்கள்.அப்படிச் சேகரிப்போருள் பலர், அலுவலக் 'அவுட்லுக் மெயிலில்', அன்னா ஹசாரேவை ஆதரித்து மெயில் ஃபார்வெர்ட் செய்து், ஊழலுக்கெதிராக, 'மிஸ்டு கால்' கொடுக்கச் சொல்லி, மன்றாடும் கோமாளிப் போராளிகளும் அடங்குவர் .
அலுவலக நண்பரொருவர் அன்னா ஹசாரேவின் அதி தீவிர ஆதரவாளர். அவரும் இம்மாதிரியான செயல்களில், மிக மும்முரமாக இருப்பதுதான் செம்ம காமெடி! பொறுக்க முடியாமல், அவரிடம் கேட்டே விட்டேன். அவர் சொன்ன பதிலென்ன தெரியுமா..? "யாரோ, ஆஸ்திரேலியப் பணக்காரராம்.அவர் இந்திய அரசாங்கத்துக்கு எவ்வளவோ கோடிகள் ஏழை மக்களுக்கென கொடுத்தாராம்; ஆனால், அதில் இன்று வரை ஒரு பைசா கூட இந்திய அரசு செலவழிக்கவே இல்லையாம். அப்பறம் நான் எதுக்கு அரசுக்கு வரி கட்டணும்..?! எனக்கு விருப்பமில்லை" என்றார். சுற்றிச் சுற்றி மறுபடியும் அதே பல்லவி! "சுவிஸ்ஸில் உறைந்து கிடக்கும் இந்தியக் கருப்புப் பணத்தை மீட்டு வந்து விட்டால், இருக்கும் 130 கோடி மக்களுக்கும் ஒரு இலட்சம் இனாமாகக் கொடுக்கலாம். தெரியுமோ!" என்றார். நான் பதிலுக்கு, "முயற்சியைக் கைவிட்றாதீங்க பாஸ்! முயன்றால், முடியாதது எதுவுமேயில்மை.." என்று ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். மனப்பால் குடிப்பவர்களுக்கு வேறென்ன பதில் சொல்ல முடியும்..?
மெத்தபடித்தோர் உட்பட, தாம் என்ன செய்கிறோமென தெரிந்தே, இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதுதான் கடும் கண்டனத்துக்குரியது. சில மருத்துவர்களும் இவர்களுக்கு உடந்தை! "என்னிடம் தான் இந்த அன்பர் இவ்வளவு செலவு செய்து, மருத்துவம் பார்த்தார்" என்று தங்கள் அக்மார்க் கோழிக் கிறுக்கல் கையெழுத்தில் எழுதி, கூசாமல், 'ரெவின்யூ ஸ்டாம்ப்' மேல் கையெழுத்துப் போட்டுத் தருகிறார்கள். இலவசச் சேவையா இது..? என்றெல்லாம் அசட்டுத்தனமாகக் கேள்வி கேட்காதீர்கள். நீங்கள் கேட்கும், தொகைக்கு இரசீது எழுதித் தர, அந்தத் தொகையில் நான்கு அல்லது ஐந்து சதவீதம் கமிஷன். நாம் நேர்மையாக சம்பாதிக்கும் காசை, நமக்குச் சம்பந்தமில்லாத ஒருவன், உடல்வலிக்காமல் எங்கோ அமர்ந்திருப்பவன் சாப்பிடலாம். ஆனால், நம்மை ஆளும் அரசுக்கு எக்காரணம் கொண்டும் பணம் சென்று விடக் கூடாது என்ற புரிதல் எவ்வகையில் சரி..? என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறையும் பால், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும் போதெல்லாம், நம் இரத்த அழுத்தம் ஏறும். கோபம் வரும்! ஆனால், நம் வருமானத்திற்கேற்ற, சரியான வரி கட்ட மாட்டோம். கேட்டால், அரசு எனக்கு செய்தது என்ற சப்பைக் கட்டு காரணங்கள். என்ன விதமான மனநிலை இது! தனிமனிதர்கள் செய்யும் ஒவ்வொரு தவறும், நாளை ஒட்டுமொத்த சமூகத்தையுமல்லவா பாதிக்கிறது. ஒன்றுக்கும் உதவாத அரசு என்றாலும், மக்கள் செலுத்தும் வரியை வைத்து, விலைவாசியை ஓரளவாவது கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும். அவ்வளவு ஏன்..? குறைந்த பட்சம், நம் வேலையைச் சரியாகச் செய்தோம் என்ற மனதிருப்தியாவது ஏற்படுமே!
அரசு கொடுக்கும் இலவச (விலையில்லா) வேட்டி-சேலை போன்றவற்றை, வாங்கி நாற்பது, ஐம்பது ரூபாய்க்கு விற்பது, ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி, அதிக விலைக்கு விற்பது முதலிய 'பாமரத்தனமான ஊழல்களை'க் கண்டு பொங்குவோர்களும் இதே 'படித்தோர்' பட்டியலில் இருப்போர்தான். அவ்வளவு ஏன்..? ஹசாரே-வின் கோஷ்டியில் இருக்கும், கிரண் பேடி கூட இப்படியொரு சில்லறைத்தனமான ஊழலைச் (விமான 'பிஸ்னஸ்' வகுப்புப் பயணச் சீட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, 'எகனாமிக்' வகுப்பில் சென்றது ) செய்ததற்காகத்தானே விமர்சிக்கப்பட்டார். அப்போதும், பெருவாரியான விமர்சனங்களை, பேடியை நோக்கி முன் வைத்ததும் இந்தக் கோமாளிப் போராளிகள்தாம்.
ஊழலுக்காக உண்ணாவிரதமெல்லாம் இருக்க வேண்டாம்! அவரவர் துருத்தியை ஒழுங்காக ஊதினாலே போதும் என்பது என் துணிபு. ஊழலை எதிர்த்து, புரட்சி செய்யும் வேலைகளை எல்லாம் கல்யாண் ஜுவல்லர்ஸ் முதலான, 'கண்ணியமான' நிறுவனங்கள், 'கனமான' பிரபு மாதிரியானவர்களை வைத்துச் செய்து கொள்வார்கள். மற்றபடி, மேற்குறிப்பிட்ட கணவான்களைத் திருந்தவெல்லாம் சொல்லவில்லை. பிறகெப்படி நமக்குப் பொழுது போகும்..? எனக்கு இப்போதிருக்கும் கவலையெல்லாம், கணவான் என்ற சொல்லுக்கு, ரெண்டு சுழி 'ன'வா..இல்லை...மூனு சுழி 'ண' வா என்பதுதான்!
-♠ராஜூ♠